அநுக்கிரகா
அமரர் நா. பார்த்தசாரதி
முன்னுரை
டாக்டர் சு. வேங்கடராமன் இணைப் பேராசிரியர் (தமிழ்த்துறை) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
தமிழில் அரசியல் நாவல்கள் மிகவும் குறைவு. அத்தகு அரசியல் நாவல்களிலும் சமகால அரசியல் நாவல்களாக - அரசியலை விமர்சிக்கும் நாவல்களாக அமைவது அருகிய வழக்கமாக உள்ளது. அமரர் நா. பார்த்தசாரதி இந்த அருகிய வழக்கைச் செம்மையாகச் செய்துள்ளார். "சத்திய வெள்ள'த்தில் தொடங்கிய இப் பணியை அவர் பல நாவல் களில் தொடர்ந்து செய்தார். இப்போது வெளிவரும் அநுக்கிரகா நாவலிலும் சமகால அரசியலை விமர்சித்து நா.பா. எழுதியுள்ளார். ஆக்ஸ்போர்டில் படித்து மேற் கத்திய நாகரிகத்தில் திளைத்து நிற்கும் அநுக்கிரகா நம் ஊர்ப் பேட்டை அரசியலில் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டு, அடிமட்ட உறுப்பினர், மேடைப் பேச்சாளர், நட்சத்திர மதிப்புப் பேச்சாளர், திருமணத்தில் வாழ்த்துரைப்பவர், எம். எல். ஏ., மந்திரி என்று படிநிலை வளர்ச்சி பெறுவதை நாவல் சித்திரிக்கிறது. மந்திரியாக ஆனபின் அரசியல் எவ்வாறு அவளை உருமாற்றுகிறது என்பதையும் தன்னை அரசியலுள் புகுத்திய தன் தந்தையையே எவ்வாறு எதிர்த்து நிற்கிறாள் என்பதையும் காட்டுவதன் மூலம் அரசியல் எவ்வாறு குடும்ப உறவுகளைச் சிதைக்கிறது என்று காட்டுவது அழுத்தமான அரசியல் விமர்சனமாகும்.
தமிழர்களின் - இந்தியர்களின் அரசியலில் எவ்வாறு
பொய்யும் புனை சுருட்டும் கலந்துள்ளன என்பதை இந்த நாவல் நன்கு காட்டுகிறது. தங்கள் பெயரினை மாற்றிக் கொள்வதிலும், 'சீவகசிந்தாமணிச் சிங்கமே சீறி எழு! சிறுத்தையே பொறுத்தது போதும் பொங்கி எழு! புறநானூற்று புலியே புறப்படு! அகநானூற்று யானையே
மதம்கொள்!' என்று மேடையில் பேசுவதிலும் உள்ள தமிழ்ப் பற்று, தமிழ் மொழி, கலாசாரம், தமிழ் இன மேன்மை என்ற வளர்ச்சி நோக்கில் செல்லாமல் தன்னலம், அதிகார வேட்கை, சூதாட்டம் என்பதாக நின்றதை நா. பா. அழுத்தமாகக் காட்டுகிறார். பேசும் அரசியல்வாதி, மக்களைச் சிங்கம், புலி, யானை என்ற விலங்குகளாக மதிக்கிற போக்கே இந்த நாட்டில் காணப்படுகிறதே அன்றி, மக்களை மக்களாக மதித்திடும் போக்கு அரசியலில் வளரவில்லை, அரசியலாளர்கள் பல்வேறு முகங்களைக் காட்டி வாணவேடிக்கை அரசியல் நடத்துகின்றனர். "அடை மொழிகளின் அதிகக் கனத்தால் அவை சார்ந்து நிற்கும் வார்த்தைகளின் முதுகு முறிந்து போகிற மொழிநடை எப்படியோ ஒரு தொற்றுநோயாகப் பரவியிருந்தது. என்பது போன்ற அற்புதமான சமகாலத் தமிழ்ச் சமுதாய விமர்சனத் தொடர்கள் இந்த நாவலில் மிகுதி.
இந்த நாவலில் வரும் பல மாந்தர்களும் நிகழ்ச்சி களும் நமக்குப் பலரை, பல சம்பவங்களை நினைவூட்ட லாம். வாழ்க்கை யதார்த்தம் கற்பனை மெருகு ஊட்டப் பட்டுக் கலை யதார்த்தமாக நன்கு காட்டப்பட்டுள்ளது இந்த நாவலில். தமிழ்ச் சமுதாயத்தை அதன் அரசியல் பின்னணியில் அங்கதச் சுவையுடன் நா. பா. இதில் காட்டி யுள்ளார். தமிழ்ச் சமுதாய அரசியல் சீரழிவிற்குள்ளான முகமாக-முகமூடிகளே முகங்களாகிப்போன அரசியலாளர் களின் விசுவரூபக் காட்சியாக - அநுக்கிரகா நாவல் உள்ளது. நம்முடைய சமுதாய அமைப்பில் அரசியலில் பங்கேற்கும் பெண்ணை எவ்வாறு பிறர் (ஆண்கள்) மதிப் பிடுகின்றனர் எனவும் நயமாகக் காட்டுகிறார். நல்ல அரசியல் விமர்சன நாவலான 'அநுக்கிரகா' தமிழ் நாவல் வரலாற்றின் முதிர்ச்சியைக் காட்டுவதாகும்.
அநுக்கிரகா
1
சைக்கிள் கடை பொன்னுரங்கம் உறுப்பினர் அட்டை யைக் கொண்டுவந்து கொடுத்தபோது அநுக்ரகா தோட் டத்தில் டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தாள்.
பச்சைப் பாய் விரித்தாற்போல ஒரு சீராகக் கத்திரித்து விடப்பட்டிருந்த தோட்டத்துப் புல்வெளியில் பிரம்பு நாற் காலியில் அமர்ந்து 'இந்து'வில் மூழ்கியிருந்த முத்தையா தான் முதலில் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண் டார். அவருக்குள் மகிழ்ச்சி பிடிபடாது துள்ளியது.
பொன்னுரங்கம் அவருக்கெதிரே உட்காரவில்லை. நின்றுகொண்டே பேசினான்: "அந்தச் செயலாளர் மாம்பழக் கண்ணனோடதான் கொஞ்சம் பேஜாராப் போச்சு சார்! 'இது ஏம்பா? இத்தினி பெரிய ஃபேமிலியி லேர்ந்து நம்ப கட்சியிலே வந்து மெம்பராவுறாங்க? ஆச்சரியமாயிருக்குதே?'ன்னு பிடிச்சுக்கிட்டான். மெம்பர் ஷிப் அப்ளிகேஷனோடு இரண்டு பச்சை நோட்டைச் செருகி நீட்டினேன். அப்பாலே ஏன் கண்டுக்கிறான்? கப்சிப்னு ஆயிட்டான்."
அப்போ அநு மெம்பராகச் சேர்ந்ததைப் பத்தி அவங் களுக்கு ஒரு சந்தேகம் இருக்குதுன்னு சொல்லு."
"கண்டிப்பா இருக்குங்க. சந்தேகம் மட்டுமில்லே என்னமோ ஏதோன்னு பயப்படவும் செய்யறாங்க,"
முத்தையா இவ்வளவில் அவனோடு பேசுவதை நிறுத்திக்கொண்டு, "அநு! இங்கே வா. பொன்னுரங்கம் வந்திருக்கான், பாரு," என்று டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த மகளைக் கூப்பிட்டார்.
உடனே விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணை விடை கொடுத்து அனுப்பிவிட்டுத் தந்தை யருகே வந்தாள் அநுக்ரகா. அவள் டென்னிஸ் உடை யுடன் வந்தது முத்தையாவுக்கு உள்ளூர அவ்வளவாக ரசிக்கவில்லை. செல்லமாகக் கண்டித்தார்.
"உள்ளே போய் ஸாரி மாத்திக்கிட்டு வாம்மா! இன்னம் லண்டன்லே இருக்கிறதாகவே நினைப்பாம்மா உனக்கு? இப்படி டென்னிஸ் உடையிலேயும், ஸ்விம்மிங் சூட்லேயும் நின்னுட்டிருந்தால் இங்கே பாலிட்டிக்ஸ்ல புகுந்து ஒண்ணும் பண்ணிக்க முடியாது. ஃபிலிம் லயன்ல வேணா இந்த மாதிரி டிரெஸ்லே ஷைன் பண்ணலாம்."
''ஐயாம் ஸாரி டாட்!" புடவையை மாற்றிக்கொண்டு வர டென்னிஸ் மட்டையுடன் உள்ளே போனாள் அநுக்ரகா.
திரும்ப வந்து அவள் தன்னிடமும் எங்கே ஆங்கிலத்தி லேயே பேசிவிடப் போகிறாளோ என்று முன்னெச்சரிக்கை யான ஒருவகைப் பயம் பொன்னுரங்கத்தைப் பிடித்துக் கொண்டது. வாயைத் திறந்தாலே ஆங்கிலத்தைத் தவிர வேறெதுவும் வராத இந்த வெள்ளைக்கார நாசூக்குடன் இவள் எப்படிக் குப்பனும் சுப்பனும் நிறைந்த ம.மு.க. (மக்கள் முன்னேற்றக் கட்சி)வில் இடம் பிடித்து முன்னேறப் போகிறாள் என்று தயக்கமாகக் கூட இருந்தது அவனுக்கு. முத்தையாவோ அடித்துச் சொன்னார்:
"என்ன செலவானாலும் பரவாயில்லேப்பா! எனக்கு இது ஒரு சவால்னே வச்சுக்க! நம்ப அநுவைப் பாலிடிக்ஸ்ல மேலே கொண்டாந்தே ஆகணும்! இங்கிலாந்திலே படிச்ச
வளாச்சே, சரியாத் தமிழ் பேச வருமோ, வராதோன் னெல்லாம் கவலைப்படாதே. யாராச்சும் புலவருங்களை ஏற்பாடு பண்ணிக் கத்துக் கொடுத்திடலாம்.. சுளுவா எல்லாம் வந்துடும்ப்பா."
"கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நிக்காதும்பாங்களே, ஐயா!"
"அதெல்லாம் ஹைதர் காலத்துப் பழமொழியப்பா. இப்ப செல்லுபடி ஆகாது. அநுவுக்குக் குறிப்பறிஞ்சு பழகற குணம் அதிகம். இது இது இப்படி இப்படின்னு ஜாடை காமிச்சாலே புரிஞ்சுக்குவாள். அவளோட முகராசிக்கு அவள் தப்பாத் தமிழ் பேசினாலும்கூட ஜனங்க கைதட்டிக் கொண்டாடப் போறாங்க, பாரு."
"நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க. ஆனா ......
"ஆனாலாவது போனாலாவது? ஜமாய்க்கப் போறாள். பார்த்துக்கிட்டே இரு."
"நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க. ஆனா அந்தக் கனிவண்ணன் ரொம்பப் பொல்லாத ஆளாச்சே."
"அவன் பொல்லாதவனா இருந்தா அது அவனோட, இன்னம் எண்ணி ஆறே மாசத்திலே என் மகள் அவனை ஓரங்கட்டி நிறுத்தறாளா இல்லியா பாரு."
முத்தையாவின் கோபத்துக்குக் காரணம் இருப்பது பொன்னுரங்கத்துக்குப் புரிந்தது. பரம்பரைப் பெரிய மனிதரான முத்தையாவை முந்தா நாள் அரசியல்வாதி யான கனிவண்ணன் அவமானப்படுத்தி விட்டதுதான் இந்தக் கோபத்துக்குக் காரணம். கேவலம் ஒரு சின்ன விஷயத்துக்காக அவன் அவரிடம் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டாம் என்றே பொன்னுரங்கத்துக்குக் கூடத் தோன்றியது.
ஆவாரம்பட்டு முத்தையாவின் பங்களாவை ஒட்டி இருந்த காலியான புறம்போக்கு நிலத்தில் 'பார்க்' ஒன்று அமைக்கும் திட்டம் இருந்தது. 'பார்க் அவசியமில்லை, பூங்காவுக்குப் பதில் வீடற்றோருக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு சாரார் அபிப் பிராயப்பட்டனர். இப்படி அவர்கள் பூங்காவா, வீட்டு வசதியா என்று முடிவு செய்யுமுன்பே புறம்போக்கு நிலத் தில் தாறுமாறாகக் குடிசைகள் முளைத்துக் கிளம்ப ஆரம் பித்தன. முத்தையா வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் சாத்தினாற் போலவே பலர் குடிசைகள் போட ஆரம்பித் தனர். சுகாதாரம் கெட்டு அரண்மனையாக விளங்கிய முத்தையாவின் பங்களாவைச் சுற்றிக் கொசு, சாக்கடை எல்லாம் தேங்கி நாற ஆரம்பித்தது. 'ஆவாரம்பட்டு ஹவுஸ்' மதில் சுவர் ஓரங்கள் திறந்த வெளிக் கழிப்பிடங் களாக ஆயின.
முத்தையா நகர அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் கடிதம் மேல் கடிதம் எழுதிப் போட்டும் பயனில்லை. "தொகுதி எம். எல். ஏ.யைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லுங்க, உடனே நடக்கும்," என்று சிலர் சொல்லவே முத்தையா அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வான கனிவண்ண னைப் பார்ப்பதா வேண்டாமா என்று தயங்கினார்.
குடிசைகளைக் காலி செய்துவிட்டுப் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்குவதைத் துரிதப்படுத்தும்படி எம்.எல்.ஏ.யை முடுக்கி விடலாம் என்றுதான் முன்னாள் ஆவாரம்பட்டு ஜமீன்தார் திவான் பகதூர் சர். முத்தையா பி.ஏ.பி.எல். அவனைச் சந்திக்கச் சென்றார். அவர் நிலைக்கு, கூப்பிட்டனுப்பினாலே வரக்கூடிய அவனை அவர் தேடிப் போனார்.
மரியாதையும், பண்பாடும் பரம்பரைப் பெருந்தன்மை
யும் உள்ள முத்தையாவுக்குக் கனிவண்ணன் வீட்டில்
அதிர்ச்சிதான் காத்திருந்தது. சந்தையிலோ, கருவாட்டுக்கடையிலோ இருக்கிற மாதிரி அங்கே கூட்டம், நிற்கக் கூட இடம் இல்லை. உட்காருவதைப் பற்றி எண்ணியும் பார்க்க முடியாது.
ஆவாரம்பட்டு ஜமீன் திவான் பகதூர் சர். வி.டி. முத்தையா என்று அச்சிடப்பட்ட விசிட்டிங் கார்டைக் கொடுத்து அனுப்பினார், அப்படியும் பயனில்லை. மூன்று நாள் இப்படியே நடந்தது. நாலாவது நாள் வெளியே புறப்படும் எண்ணத்தோடு அறையிலிருந்து காருக்கு வந்த எம்.எல்.ஏ.யிடம், "ஐயாம் வி.டி. முத்தையா"என்று தாமே முன்சென்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"இப்போ அவசரமாகப் போய்க்கிட்டிருக்கேன், நாளை ராத்திரி ஒன்பது மணிக்குப் பார்ட்டி ஆபீசுக்கு வாங்க. பார்க்கலாம்," என்று கூறிவிட்டு அவர் முகத்தைக்கூட ஏறிட்டுப் பார்க்காமல் பொறுமையின்றிக் காரில் போய் ஏறிக் கொண்டான் எம்.எல்.ஏ.
முத்தையாவுக்கு அவமானப்பட்டுவிட்ட உணர்ச்சி. யுத்த காலத்தில் சில ஆண்டுகள் லண்டனில் இருந்தபோது குறித்த நேரத்தில் குறித்தபடி சென்று சர்ச்சிலைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மிகவும் முயன்று இண்டர்வியூ நேரம் கேட்டுப் பெற்றுப் பக்கிங்ஹாம் பாலஸ் சென்று அரசியைக் கூட இரண்டு நிமிடம் சந்தித்திருக்கிறார்; கையுறையாக மலர்ச் செண்டும் அளித்திருக்கிறார்.
இன்று சுதந்திரம் பெற்ற சொந்த நாட்டில் தன்னு டைய தொகுதி எம்.எல்.ஏ.யை வேலை மெனக்கிட்டு நாலு நாள் காத்திருந்தும் பார்த்துப் பேசத் திண்டாடும் நிலை அந்த / முதியவருக்கு எரிச்சலூட்டியது. பொறுமையை இழக்காமல் அவனைத் தேடி அவர் மறுநாள் இரவு போன போதுகூடச் சந்திக்க முடியவில்லை. பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தோடு வந்தால் வந்தால் அந்தப் அந் பிரச்சினையைக் கவனிக்க லாம் என்று உதவியாளன் ஒருவன் மூலம் அவருக்குச் சொல்லி அனுப்பப்பட்டது.
பொறுமை இழந்த வி.டி. முத்தையா விசுவரூபம் எடுத் தார், விரக்தியிலும் தன்னைவிட எல்லா வகையிலும் தாழ்ந்த ஒருவனிடம் அவமானப்பட்டுவிட்ட ஆத்திரத்தி லும் சீறினார். கனிவண்ணனைப் போன்ற அரசியல் மலிவுப் பதிப்புப் பேர்வழிகளை ஆயிரம் பேரானாலும் விலைக்கு வாங்கிப் போடுகிற வசதியுள்ள அவர், இப்போது அவனை விலைக்கு வாங்குவதைவிடப் பழி வாங்கித் தீர்த்து விடுவதையே விரும்பினார். அது அவரால் முடியும் என்றே தோன்றியது.
அவனை விலைக்கு வாங்குவதானாலும், பழிவாங்கு வதானாலும் இரண்டிற்குமே செலவாகும். சொல்லப் போனால் விலைக்கு வாங்குவதைவிடப் பழிவாங்குவதற்கு இன்னும் அதிகம் செலவாகக் கூடும். அப்படி ஆனாலும் பரவாயில்லை. கனிவண்ணனைப் பழிவாங்கியே தீருவது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டிருந்தார் அந்தப் பரம் பரைப் பணக்காரர்.
கிட்டத்தட்ட எண்பதை நெருங்கும் தன் வயது. குடும்பம், பணம் எதையுமே லட்சியம் செய்யாமல் அவன் தன்னை அவமானப் படுத்திவிட்ட வடு அவருள் ஆறவே இல்லை. முத்தையா யோசித்தார். தன் வயதுக்கு இனிமேல் தான் அவனை எதிர்த்து ஆரசியலில் இறங்கி ஈடுபட்டுப் பழிவாங்குவது என்பது சாத்தியமில்லை. அது பொருத்த மாகவும் இருக்காது. ஒரே மகள் அநுக்ரகா முந்தா நாள் வரை ஆக்ஃஸ்போர்டில் தங்கிப் படித்தவள். அல்ட்ரா மாடர்ன் பழக்க வழக்கங்களும் ஆக்ஸ்ஃபோர்டு உச்சரிப் புடன் கூடிய ஆங்கிலமும் தமிழக - இந்தியப் பட்டிதொட்டி அரசியலுக்குத் தோதுபடுமா என்றும் சந்தேகமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. முத்தையாவின் மூத்த தாரத்துக்கு இரண்டு பையன்கள்.இருவரும் அவரோடு இல்லை. கருத்து வேறுபட்டுத் தங்களுக்குச் சேர வேண்டியதைப் பிரித்துக் கொண்டு போய் விட்டார்கள். ஐம்பது வயதில் கொச்சியிலிருந்து ஒரு மலையாளப்